Thursday, September 8, 2016

குனிகர் மறுக்கிறார்!

குனிகருக்கு ஷார்மியின் பேச்சில் இன்னமும் நம்பிக்கை வரவில்லை! ஆகவே அவர் செய்வதறியாது சற்றே யோசித்தார். பின்னர் ஷார்மியிடம், “தாயே, தாங்களும் தங்களுடன் வந்திருக்கும் பெண்களும் சற்று நேரம் இதோ இந்த யமுனைக்கரையில் அமர்ந்து இளைப்பாறுங்கள்! நாம் செல்லலாம்.” என்றவர் திடீரென நினைத்துக் கொண்டவர் போல, “தாயே, தாங்களே நேரில் பார்த்தீர்களா பாலமுனியை? உங்களுடன் பேசினாரா?” என்றும் கேட்டார். குனிகரின் முகத்தில் அவநம்பிக்கை பிரதிபலிப்பதைக் கண்ட சுகர் உடனே குறுக்கிட்டார். “மந்திரி குனிகரே! தந்தை மோசாவின் சிறைச்சாலையில் தான் இருக்கிறார். அவர் தான் எங்களை உடனே தப்பி உங்களுடன் போய்ச் சேர்ந்து கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார். அவரால் வர முடியவில்லை. தன் முடிவைக் கடவுளரின் கைகளில் ஒப்படைத்து விட்டார்.” என்று சொல்லி நிறுத்தினார். அதற்குள்ளாக முனிஅவரின் சீடர்களும் தங்கள் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அங்கே வந்து சேர்ந்தனர்.

“அது சரி, முனிவரே! நீங்கள் ஏன் ஆசாரியரையும் உங்களுடன் அழைத்து வரவில்லை?” குனிகருக்கு அங்கே நிலவும் சூழ்நிலையைக் குறித்துச் சரியான புரிதல் இல்லை என்பது அவர் கேள்வியிலேயே தெரிந்தது. அப்போது ஷார்மி குறுக்கிட்டு, “குனிகரே, நீர் பாலமுனியின் நடவடிக்கையைக் குறித்து ஏதும் அறியவில்லையோ? அல்லது மறந்துவிட்டீரோ? அவர் ஒரு முறைஒரு முடிவு எடுத்தாரெனில் ஹஸ்தினாபுரத்தின் மொத்த யானைப் படைகளால் கூட அவரை ஒரு அங்குலம் நகர்த்த முடியாது! அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டாள். “ஆனால் தாயே, இதற்குள்ளாக அவரைக் கொன்றிருப்பார்களே!” என்று வருத்தத்துடன் கூறினார் குனிகர். “ஆம், எங்களுக்கும் அது தெரியும்! மோசாவிடமிருந்து அவரைத் தப்புவிக்க எவ்விதமான வாய்ப்புகளும் இல்லை!” என்ற ஷார்மிக்கு குனிகரின் அவநம்பிக்கை குறித்து அவர் மேல் வெறுப்பு ஏற்பட்டது. ஆகவே தொடர்ந்து அவள், “இப்போது நீயும் இந்த ஷார்மி அன்னையிடமிருந்து தப்பப் போவதில்லை. நான் சொல்லுகிறமாதிரி கேட்டால் தான் பிழைப்பாய்!” என்றவளுக்கு வாஜ்பேய யக்ஞம் நடந்தபோது விருந்துபசாரம் செய்யும் தலைமையிடத்தில் தான் இருந்ததும், அப்போது இதே குனிகர் தன்னிடம் நடந்து கொண்ட விதமும் நினைவுக்கு வந்தது.

குனிகருக்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பது புரிந்தது. அவர் க்ரிவியைப் பார்த்து, “க்ரிவி, உட்கார், உன் மகன்களையும் அமரச் சொல். உங்களுக்கெல்லாம் உணவளிக்கும்படி உத்திரவிடுகிறேன்.” என்றார். “அப்படியே இங்கே வந்திருக்கும் விருந்தினர்களுக்கும் தக்க உபசாரங்களைச் செய்கிறேன்.” என்றார். சுகர் குறுக்கிட்டு, “நாங்கள் எங்கள் வாக்குறுதிகளைக் கைவிட முடியாது. நாங்கள் ஐவரும் பிரமசாரிகள். சூரியனை முதலில் வணங்க வேண்டும். சந்தியாவந்தனங்கள் செய்ய வேண்டும். அக்னிஹோத்திரம் செய்ய வேண்டும். அதன் பின்னரே நீர் என்ன கொடுத்தாலும் எங்களால் சாப்பிட முடியும்!” என்றார். படகோட்டிகள் வந்து தப்பி வந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்தனர். ஷார்மியால் ஒரு கவளம் கூடச்சாப்பிட முடியவில்லை. அவள் மனம் தன் கணவன் கௌதம முனிவரையும் தாங்கள் இருவரும் பெற்றெடுத்த குழந்தைகளையும் நினைத்து நினைத்து கலங்கிக் கொண்டிருந்தது. குழப்பமானதொரு மனநிலையில் இருந்தாள் அவள். அதோடு த்வைபாயனரைக் குறித்த கவலையும் இப்போது சேர்ந்து விட்டது. இத்தனை நேரம் மோசாவின் கொடுங்கரங்களில் மாட்டிய த்வைபாயனர் இறந்தே போயிருப்பாரே! கலங்கினாள் அவள்.

அவளருகில் சுகர் நின்று கொண்டிருந்தார். மாறிக் கொண்டிருந்த அவளது முகபாவத்திலிருந்து அவள் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டவர் போலப் பேசினார். “தாயே, பழைய நிகழ்வுகளை முற்றிலும் உங்கள் மனதிலிருந்து அழியுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து புதியதொரு உலகைப் படைப்போம்.” என்றார் ஆறுதலாக. ஷார்மி பரிதாபமாக அவரைப் பார்த்தாள். பின்னர் பொங்கி வரும் விம்மல்களினூடே சொன்னாள்:” நான் என் அருமைக் கடவுளான ஆசாரியரை இழந்தேன்; என் குழந்தைகளை இழந்தேன்; இதோ இப்போது என்னால் வளர்க்கப்பட்ட, “என் கிருஷ்ணன்” அவனையும் இழந்து விட்டேன். இனி இழக்க என்னிடம் ஏதுமில்லை. இந்த முதிர்ந்த வயதில் நான் உன் ஒருத்தனையே நம்புகிறேன். என்னைக் காப்பாற்ற உன்னை விட்டால் இப்போது வேறு யாரும் இல்லை!” என்றாள்.

அதைக் கேட்ட சுகர் தான் பெண்களைத் தொடுவதில்லை என்று செய்திருக்கும் சபதத்தைக் கூட மீறி அவளைக் கட்டி அணைத்து ஆசுவாசப் படுத்தினார். “தாயே, நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? நான் தான் இருக்கிறேனே! அதை மறவாதீர்கள்!” என்றார். “ஆம், குழந்தாய்! நீ ஒருவன் தான் எனக்கு மீதி இருக்கிறாய்!” என்ற வண்ணம் அவளும் அவரைக் கட்டிக் கொண்டாள். அவள் கைகளைத் தூக்கித் தன் தோள்களில் போட்டுக் கொண்டு சுகர் மிகவும் அன்புடன் கூறினார்: “அம்மா, நீங்கள் விரக்தியில் மூழ்க வேண்டாம். கடவுளர் அனைவரும் நம்முடன் இருக்கின்றனர். அதோடு இல்லாமல் புனிதமான அக்னி கோதுலி ஆசிரமத்தில் எரியும் நாள் தொலைவில் இல்லை. விரைவில் வரும். உங்கள் சந்தோஷமான வாழ்க்கைக்குக் கடவுளிடமிருந்து எவ்விதமான மறுப்பும் வரப் போவதில்லை! நம்பிக்கையை இழக்காதீர்கள்!” என்று வேண்டினார். சிறிது நேரம் ஷார்மி வாய் விட்டு அழுதாள். பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன்னைச்சரிப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தாள்.

தன்னுடைய இயல்பான நிலைக்கு வந்ததும் அவள் மீண்டும் குனிகரிடம் திரும்பினாள். “குனிகரே! விரைவில் ஹஸ்தினாபுரத்துக்கான நம் பயணத்தைத் தொடங்க வேண்டும்!” என்றாள். அதற்கு குனிகர் மறுப்பாகத் தலை அசைத்தார். “அம்மா, தயவு செய்து என்னை மன்னியுங்கள். நாம் இப்போது பயணத்தைத் தொடர முடியாது! நான் பரத குல இளவரசரான பீஷ்மரின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும். அதைத் தான் என் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும். அவருடைய கண்டிப்பான கட்டளை பாலமுனிக்கு எவ்விதமான ஊறும் நேராமல் பாதுகாக்கவேண்டும் என்பதே! தயவு செய்து மோசா என்னவெல்லாம் செய்தான் என்பதை விரிவாக எடுத்துச் சொல்லுங்கள்!” என்றார்.

ஷார்மிக்கு அலுப்பு மேலிட சுகரை அழைத்து அவரிடம் குனிகருக்கு விளக்கிச் சொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.  சுகரும் ஆசிரமத்தில் நடந்தவற்றையும் ஆசிரமவாசிகளுக்கு நடந்தவற்றையும் விவரித்துச் சொன்னார். ஆசாரிய கௌதமரும் அவர் குழந்தைகளும் கொல்லப்பட்ட விதத்தை விவரித்தார். ஆடுமாடுகளை அடிப்பது போல் அடித்துத் துன்புறுத்தி ஆசிரமப் பெண்களைப் பழங்குடியினரின் தலைமையகத்துக்கு இட்டுச் சென்றதையும் கூறினார். “இப்போது எங்கள் அனைவரின் நலனுக்காகவும்,பாதுகாப்புக்காகவும் தான் தந்தை தன்னைத் தானே தியாகம் செய்திருக்கிறார்.” என்றும் கூறினார்.  “அப்படியா? அப்போது நான் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். யோசித்துத் தான் ஹஸ்தினாபுரம் செல்ல வேண்டும்.” என்ற குனிகர் தொடர்ந்து, “எனக்கிடப் பட்ட கட்டளையே தொடர்ந்து பாலமுனியைக் கண்காணித்து அவருக்கு ஊறு நேராமல் காப்பாற்ற வேண்டும். அவருக்கு ஏதேனும் தாக்குதல் நடந்தாலோ அல்லது அவரை எவரேனும் கொன்றுவிட்டாலோ உடனுக்குடன் கொன்றவர்களைத் தேடி நான் அவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும்.” என்றார்.

“ஆனால் எங்களுக்கு பாலமுனிவரின் யோசனைகள் இவை தான் மந்திரியாரே! “நீங்கள் ஆசாரியர் என்று அவரைச் சொன்னாலும் சரி! அவருடைய கட்டளை இது தான்.நாங்கள் அனைவரும் விரைவில் ஹஸ்தினாபுரம் போய்ச் சேர வேண்டும் என்பதே!” என்றாள் ஷார்மி மீண்டும். “அதெல்லாம் சரிதான் தாயே! ஆனால் நான் காங்கேயரின் கட்டளையை அன்றோ மதிக்க வேண்டும்? அது என்ன ஆவது? ஹஸ்தினாபுரத்தின் மந்திரிகளில் ஒருவனான நான் முக்கியமாக இந்த வேலைக்கு நியமிக்கப்பட்டதே எப்பாடுபட்டவது ஆசாரியரைக் காப்பாற்றி ஆகவேண்டும் என்பதற்காகவே!” என்றார் குனிகர். “எப்படிச் செய்வாய் அதை? இத்தனை நேரம் அவனைக் கொன்றிருப்பார்கள் அந்த ராக்ஷசர்கள்!” என்றாள் ஷார்மி.

அப்போது குனிகர், “நான் இப்போது அரசப் படகை கோதுலியில் போய்க் கரையிறங்குமாறு ஓட்டிச் செல்லப் பணிக்கப்போகிறேன், ஆசிரமங்களை எரிப்பதும் ஆசாரியர்களை உயிருடன் எரித்துக் கொல்வதும், குழந்தைகளை அழிப்பதும் ஸ்ரோத்திரியர்களுக்குத் தீங்குகள் செய்வதும் ஹஸ்தினாபுரத்துக்கும், குரு வம்சத்துக்கும் அதன் இளவரசரான காங்கேயருக்கும் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தி! காங்கேயர் தர்மத்துக்காகப் பாடுபடுவதாக உறுதிமொழி எடுத்துள்ளார். தர்மத்தை மீறுபவர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என்றும் கூறி இருக்கிறார். ஆகவே இத்தகைய அடாத செயல்களைச் செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும். அதை முடிக்காமல் என்னால் ஹஸ்தினாபுரம் வர முடியாது!” என்று தீர்மானமாகச் சொன்னார் குனிகர்.

அப்போது ஷார்மி, “நாங்கள் எப்படி ஹஸ்தினாபுரம் போய்ச் சேருவோம்?” என்று வினவினாள்.

“இப்போதைக்கு இல்லை! அது ஒரு புறம் இருக்கட்டும் தாயே! நேற்றுத் தான் நான் மூன்று படகோட்டிகளைச் சந்தித்தேன். அவர்களுடைய படகுடன் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி சொல்லி இருக்கிறேன். அந்தப் படகுகள் வந்ததும், ஷார்மி அன்னையாரும், அவருடன் வந்திருக்கும் பெண்களும், மற்ற பிரமசாரி இளைஞர்களும் அந்தப் படகுகளில் தங்கி இருக்கட்டும். க்ரிவியும் என்னுடன் வரவேண்டும்.”

1 comment:

ஸ்ரீராம். said...

திட்டங்கள் மாற்றப்படுகின்றன!