Tuesday, July 12, 2016

வாஜ்பேய யக்ஞத்துக்கான ஏற்பாடுகள்!

ஒரு சாமானியமான ஆரியனின் வாழ்க்கை தினந்தோறும் அந்தப் புனித அக்னிக்குண்டத்தைச் சுற்றியே அமைந்திருக்கும். சாஸ்திர சம்பிரதாயங்களிலும் சடங்கு முறைகளிலும் வேதங்களால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று வேள்விகள் மிக முக்கியமானவையாகக் கருதப்பட்டன. அவை அஸ்வமேத யாகம், ராஜசூய யாகம் மற்றும் வாஜ்பேய யாகம் ஆகியன. இந்த யாகங்களில் முறைப்படி அக்னிக் கடவுளும் ராஜா சோமனும் பல்வேறுவிதமாக வழிபடப்படுவார்கள். மிக விரிவான சடங்குகளைச் செய்து பல்வேறு விதமான தானங்களை முறைப்படி அளித்து இவை நிறைவேற்றப்படும். மேலும் இம்மாதிரியான சமுதாய வழிபாடுகளில், சடங்குகளில் ஆரியர்கள் மட்டுமின்றி நாகர்கள்,மற்றும் நிஷாதர்கள் கூடப் பங்கெடுத்துக் கொள்வார்கள். இவை சாதாரணமான திருவிழாக்களிலும், மற்ற சமயச் சடங்குகளிலும் செய்யப்படும் ஹோமங்களை விட மாறுபட்டுக் காணப்படும். இதை ஏற்று நடத்தும் எஜமானன் அங்கு வரும் அனைத்துவிதமான விருந்தினருக்கும் ஒரே மாதிரியான உணவளிக்கும் கடமையைக் கொண்டிருப்பான். அதைத் தவிரவும் அந்த விரிவான யாகங்களின் செலவுகளையும் முற்றிலுமாக அவன் ஏற்க வேண்டும். வந்திருக்கும் ஸ்ரோத்திரியர்களுக்கும் மற்ற அனைத்து விருந்தினர்களுக்கும் தக்கவாறு பரிசுகளை அளித்து கௌரவப் படுத்த வேண்டும்.

இதற்கு முன்னால் பரதச் சக்கரவர்த்தி அதாவது இப்போது ஹஸ்தினாபுரத்தில் இருக்கும் ஷாந்தனு மஹாராஜாவின் முன்னோர்களில் முக்கியமானவன் ராஜசூய யாகத்தை திறம்படச் செய்து நிறைவேற்றி இருந்தான். அவனுக்குப் பின்னர் இத்தகையதொரு மாபெரும் வேள்வியை ஷாந்தனு நடத்தப்போவதாக ஆர்யவர்த்தம் முழுவதும் செய்தி பரவியது. அதிலும் சாகக் கிடந்த ஷாந்தனுவை பால முனிவர் ஒரு உயிர்ப்பித்தார் என்பதும் ஓர் செய்தியாகப் பரவி இருந்தது. அந்த பால முனிவரின் தலைமையில் தான் இந்த மாபெரும் வாஜ்பேய யாகம் சித்திரை மாதம் சுக்கில பட்சத்தில் நடைபெறப் போவதாகத் தகவல்கள் ஆங்காங்கு பரவின. மேலும் இளவரசன் காங்கேயன் தானே நேரில் சென்று ஆரியவர்த்தத்தின் அக்கம்பக்கத்து அரசர்களையும், அரச குமாரர்களையும் சந்தித்து யாகத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தார். அதிலும் இவ்வளவு நாட்களாக ஓநாய்கள் குடி இருந்து அட்டகாசம் செய்து வந்த ஓநாய்களின் சாம்ராஜ்யத்தில் இந்த யாகம் முதல் முதலாக நடைபெறப் போகிறது என்றால் அதன் சிறப்பைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா! இது நிச்சயமாக ஓர் தனிப்பட்ட சிறப்பானதொரு நிகழ்வாகவே அமையப் போகிறது. இதன் அத்வர்யுவாக ஆசாரிய விபூதி தானே நேரில் கலந்து கொள்ளப் போகிறார். சாஸ்திரரீதியான சடங்குகளுக்கு அவரே தலைமை வகிக்கிறார். மேலும் அதிசயத்திலும் அதிசயமாக மஹா அதர்வர் நேரிலே வந்து கலந்து கொள்ளப் போகிறார். மூன்று வேதங்களையும் படித்தறிந்த திரிவேதிகளிடமிருந்தும் அனைத்து ஸ்ரோத்திரியர்களிடமிருந்தும் இவ்வளவு வருடங்களாக விலகி இருந்த மஹா அதர்வர் இந்த வாஜ்பேய யக்ஞத்தின் பிரம்மனாக இருக்கச் சம்மதித்து விட்டார். இது அதிசயம் அன்றோ! சுற்று வட்டாரங்களில் செய்தி பரவப் பரவக் கூட்டம் தர்மக்ஷேத்திரத்தை நோக்கிப் படை எடுத்தது.

மஹா அதர்வர் வர ஒத்துக் கொண்ட விஷயம் பெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் சிலருக்கு அது முகச் சுளிப்பையே தந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கள் தலையை ஆட்டி மறுப்புத் தெரிவித்தார்கள். அவர்களால் திரிவேதிகளான ஸ்ரோத்திரியர்களுக்கும் நான்காம் வேதமும் அறிந்த அதர்வர்களுக்கும் இடையே மீண்டும் இணைப்பு ஏற்படுவதைச் சிறிதும் ஏற்க முடியவில்லை. இது சரியல்ல என்று தங்கள் மறுப்பைத் தெரிவித்தார்கள். வேதம் நான்கு பாகங்களால் ஆனது அல்ல. அது மூன்றே தான் என்பதே அவர்களின் ஒருமித்த கருத்து. ஆனாலும் பல்வேறு ஆசிரமங்களிலிருந்தும் ஸ்ரோத்திரியர்கள் அங்கே வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து வாதித்து ஒரு முடிவுக்கு வர விரும்பினார்கள். மேலும் யாகத்தின் முடிவில் பூர்ண ஆஹூதி கொடுப்பது குறித்தும், தலைமை தாங்கி நடத்தும் ஆசாரியர்களைக் கௌரவிப்பது குறித்தும் பேசிக் கொண்டார்கள். அதோடு அல்லாமல் சமீப காலமாக மிகவும் பிரபலம் அடைந்து வந்த த்வைபாயனர் என்னும் பாலமுனியைக் கண்டு வணங்கி அவரின் ஆசிகளையும் பெற்றார்கள்.

மிகச் சிறப்பான ஆசிரமங்களின் ஆசாரியர்களும் அங்கே வந்து தங்கள் ஆசிரமத்தின் ஓர் கிளை அங்கே நிறுவப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் ஆசிரமத்தின் ஸ்ரோத்திரியர்கள் வேதங்களை ஓதுவதில் வல்லவர்களாக இருந்தனர். ஆகவே யாகத்தில் பங்கெடுக்கும் ஆர்வத்தோடு வந்திருந்தனர். இன்னும் சிலர் அந்த யாகத்தின் போது கொடுக்கப்படும் தக்ஷிணைக்காகவே வந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை தக்ஷிணையே முக்கியம். அதுவும் ஒரு சக்கரவர்த்தியால் நடத்தப்படும் யாகத்தில் தக்ஷிணை நிறையக் கிடைக்கும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு! நாட்கள் நெருங்க நெருங்க அக்கம்பக்கத்து அரசர்களும் தங்கள் படைகளோடு வர ஆரம்பித்தனர். அனைவரும் தங்குவதற்காகப் பெரிய பெரிய கூடாரங்கள் நிர்மாணிக்கப் பட்டன. அவை ஆடம்பரமாகவும் வலுவோடும் விளங்கின. சிறு வியாபாரிகள் ஆங்காங்கே சிறு சிறு கடைகளைப் போட்டுத் தங்கள் பிழைப்புக்கு வழி தேடினார்கள். பலி ஆடுகளை வளர்ப்போர் தங்கள் ஆடுகளுடன் அங்கே வந்தனர். ஆடுகள் நல்ல விலைக்குப் போகும் என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

ரிஷிகள் முனிவர்களுக்கான மான் தோலை எடுத்துக் கொண்டு வேட்டைக்காரர்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். அவற்றைப் பல தேசத்து அரசர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கித் தங்கள் தங்கள் பகுதியில் இருந்த ஆசிரமத்தின் ஆசாரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து ஏழை எளிய மக்கள் வந்து யாகத்துக்குத் தங்களால் ஆன சிறு உதவியைச் செய்து மகிழ்ந்தனர். அனைவரும் குடும்பத்தோடு வந்திருந்தனர். இதனால் பெண்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர். வீட்டில் வேலைகள் இல்லை; இப்படி வெளியே வந்து உல்லாசமாகப் பொழுதையும் போக்கி அரசர்களால் அளிக்கப்படும் விருந்தை உண்டு மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடித் திரிய இது ஓர் அரிய சந்தர்ப்பம் அல்லவா! அதோடு பல ரிஷிகளையும், முனிவர்களையும் சந்தித்து அவர்கள் ஆசிகளையும் பெற முடிந்தது. திருமணம் ஆகாத பல பெண்களுக்கு அந்த ரிஷிகள் நல்ல கணவன் வாய்ப்பான் என்று ஆரூடம் சொன்னார்கள். அந்தப் பெண்கள் அதை நினைத்து மகிழ்ந்தனர். குழந்தை பிறக்காதவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் வாழ்த்தினார்கள்.

நடனம் ஆடும் வல்லுநர்கள், பாம்பாட்டிகள், குரங்காட்டிகள், மல்யுத்தக்காரர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் தங்கள் கை வரிசையைக் காட்டி மக்களை மகிழ்வித்தனர். இவர்களோடு ஒரு சில பிச்சைக்காரர்களும் தவிர்க்க முடியாமல் கலந்திருந்தனர். அவர்களுக்கு இப்போதாவது தங்களுக்கு இலவசமாக அறுசுவை உணவு கிடைக்கிறதே என்று சந்தோஷம். யாரும் அழைக்காமலேயே அவர்கள் வந்திருந்தனர். குனிகர் அவர்களை எல்லாம் திருப்திப் படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தார். ஆரம்ப நாள் நெருங்க நெருங்க அரச மாளிகையிலிருந்து அரச விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். மேலும் ஒரு சில அரச குடும்பத்தினரின் பிரதிநிதிகள் அங்கே முன்னரே வந்திருந்து தங்கள் எஜமானர்களுக்காகத் தங்குமிடம் ஏற்பாடு செய்தனர்.

இத்தனைக்கும் நடுவில் வாடிகா மனம் விரக்தியில் நம்பிக்கையற்றுக் காட்சி அளித்தாள். ஏற்கெனவே நாள் முழுவதும் போதாது என்று இரவிலும் நடு இரவு வரைக்கும் மக்கள் கூட்டமாக வந்து அவள் கணவனின் தரிசனம் வேண்டும் என்று வந்து கொண்டிருந்தனர். வந்தாலும் தரிசனம் கிடைத்தது என்று போய்விடுவார்களா? மாட்டார்கள்! அவரைச் சுற்றிக் கூடி நின்று கொள்வார்கள். சிலர் அவர் கால்களைப் பிடிப்பார்கள். பலரும் கைகளைப் பிடித்துக் கெஞ்சுவார்கள். அதிலும் நோயுற்றவர்கள் அனைவரும் அன்றே தங்கள் உடல்நிலை குணமடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மற்றவர்கள் அவர் கால்களில் விழுந்து ஆசிகளை வேண்டுவார்கள். அவர் தினமும் சிறு குழந்தைகளுக்கு உணவைப் பகிர்ந்து அளிக்கிறார் என்பதைக் கேள்விப் பட்டிருக்கும் குழந்தைகள் பலவும் அவர் கையால் உணவு வாங்கவென்று கூடிவிடுவார்கள். அவரைக் கவனிக்கவோ அவருடைய தேவைகளை நிறைவேற்றவோ வாடிகாவுக்கு ஒரு நிமிடம் கூடக் கிடைப்பது இல்லை. முழுக்க முழுக்க விருந்தாளிகளின் பிடியிலேயே அவர் காணப்பட்டார். இருந்தாலும் அவருடைய உடல்நிலை எப்படி இருக்குமோ, நேரத்துக்குச் சாப்பிட முடியவில்லை என்று கவலை கொண்டாலும் அவள் கணவனின் இந்தப் பிரபலமான தன்மையால் அவள் மனம் கர்வமே கொண்டது. காந்தம் இரும்பை ஈர்ப்பது போல் மக்களை அவள் கணவன் ஈர்க்கிறாரே! அவளுக்கு அதில் சந்தோஷம் தான்.

இந்த வாஜ்பேய யக்ஞத்தை மஹா அதர்வர் அவருடைய ஆரம்ப நாட்களில் பொறுப்பேற்று நடத்தி இருக்கிறார். அங்கிருந்தவர்களில் வாஜ்பேய யக்ஞம் குறித்து அறிந்தவர் அவர் ஒருவர் தான். அவருக்குத் தான் முழு விபரங்கள் தெரியும். ஆகவே அவருடைய வழிகாட்டலின்படி கௌதம ரிஷியும் மற்றச் சீடர்களும் யாகத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் குறைவின்றிச் செய்து வந்தனர். சித்திரை சுக்லபட்சத்தில் ஏழாம் நாள் ரதங்களில் அரச குடும்பத்தின் விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போல் ரதத்தில் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் தகடுகள் வேயப்பட்டிருந்தது. அதைத் தவிரவும் ரதப் போட்டிக்காகத் தயார் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த குதிரைகளும் வந்தன. வாஜ்பேய யக்ஞத்தின் முக்கியமான அங்கமாக இந்த ரதப்போட்டி கருதப்பட்டது. தூதுவர்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து வந்து ஆசாரிய விபூதி தன்னுடைய முக்கியச் சீடர்களுடன் மறுநாள் வந்து சேருவதாகத் தெரிவித்தனர். ஆசாரிய விபூதி அந்த நாட்களில் திரிவேத பாடசாலைகள், குருகுலங்கள் நடக்கும் கூட்டத்தின் மஹாத் தலைமை ஆசாரியராகக் கருதப்பட்டு வந்தார். ஆகவே அங்கே வந்திருந்த ஸ்ரோத்திரியர்களில் பலருக்கும் உள்ளூர அச்சமே ஏற்பட்டது. அனைவரும் ஓர் கலக்கத்துடனேயே மஹா அதர்வரும், ஆசாரிய விபூதியும் சந்திக்கப் போகும் அந்த நேரத்துக்குக் காத்திருந்தார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பல்லாண்டுகளாக எதிரிகள். இப்படிப் பட்டப் பகையாளிகள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் யக்ஞத்தை நடத்துவதா? எப்படி?

2 comments:

ஸ்ரீராம். said...

நானும் காத்திருக்கிறேன்.

பித்தனின் வாக்கு said...

நானும் காத்திருக்கின்றேன், விருந்து சாப்பிட்டுவிட்டு.