Saturday, July 30, 2016

பரசுராமரின் வருகை!

ஆர்யவர்த்தத்தின் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்தவர்களை ஒருசேர அகற்றினார் பரசுராமர். ஆனால் அவர் ஒரு பிராமண ரிஷி என்பதால் என்ன தான் ஆயுதப் பயிற்சி அளித்து வந்தாலும், ஆயுதங்களைப் பிரயோகித்து வந்தாலும் பிராமணன் எவ்விதமான சொத்துக்களுக்கும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதால் அவர் தன்னால் வெல்லப்பட்ட பகுதிகளை மீண்டும் அந்த அரசர்களுக்கே அளித்தார். அரசர்கள் இல்லாத பகுதிகளில் அவர்கள் வாரிசுகளுக்கு அளித்தார். தான் மட்டும் மேலைக் கடற்கரைக்குச் சென்று தவ வாழ்க்கையை மேற்கொண்டார். வருடம் ஒரு முறை ஆர்யவர்த்தம் வந்து செல்வார். அவர் ஆசிரமம் ஷுர்பரகா அல்லது சோபரா என்று அழைக்கப்பட்ட பகுதியில் மேலைக்கடற்கரையில் இருந்தது. அங்கிருந்து ஒவ்வொரு வருடமும் நர, நாராயணர்களின் ஆசிரமம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பத்ரிநாத் என்னும் இமாலயப் பகுதிக்கு தீர்த்த யாத்திரையாகச் செல்வார். அப்படியே குருக்ஷேத்திரமும் செல்வார். குருக்ஷேத்திரத்தில் தான் அவர் தந்தை ஜமதக்னி முனிவரை ஹைஹேய நாட்டு மன்னன் கார்த்தவீர்யாஜுனன் கொன்றான். அவர் ஆசிரமும் அவனால் எரிக்கப்பட்டது.  ஆகவே அந்த நினைவுகளைப் போற்றும் விதமாக அங்கே சென்று அஞ்சலி செலுத்துவார்.

ஆசாரியரான பரசுராமர் ஆர்யவர்த்தம் வரும்போதெல்லாம் இங்கிருக்கும் அவருடைய மாணாக்கர்கள் தங்கள் ஆசிரமங்களுக்கு அவரை வரவேற்பார்கள். பரசுராமரின் பெயரில் பல ஆசிரமங்கள் இருந்தன. அங்கே எல்லாம் வேதப் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் யுத்தப் பயிற்சியும் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் அனைவருமே இப்போது பரசுராமர் ஆர்யவர்த்தத்தில் சுற்றுப் பயணம் செய்கையில் அவருடன் கலந்து கொள்வார்கள். திறந்த ரதத்திலேயே பெரும்பாலும் அவர்கள் பயணிப்பார்கள். ஆங்காங்கே அவர்கள் செல்லும் பகுதியை ஆண்டு வரும அரசர்களால் கௌரவிக்கப்படுவார்கள். சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் பரசுராமரை தரிசனம் செய்வதற்கு என்று கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்து அவர் ஆசிகளைப் பெற்றுச் செல்வார்கள். தம் தவத்துக்கு மட்டுமல்லாமல் வீரத்துக்கும் தைரியத்துக்கும் வலிமைக்கும் பெயர் பெற்றவராக இருந்தார் பரசுராமர். அப்படி ஒருமுறை ஆர்யவர்த்தம் வந்த போது தான் மஹா அதர்வரின் ஆசிரமத்திலும் தங்கினார் பரசுராமர். அவருடைய தாத்தா ரிகிக் என்பவர் ஜாபாலிக்கு முன்னால் மஹா அதர்வராக இருந்தார். அவரைப் பரசுராமருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அங்கே தங்கி இருந்து விட்டுப் பின்னர் குருக்ஷேத்திரமும் செல்லுவார்.

இந்தச் சமயத்தில் அதே போன்றதொரு பயணத்தின் விளைவாக இங்கே வந்த பரசுராமர் இம்முறையும் மஹா அதர்வரைச் சந்திக்கவும் அங்கே உள்ளவர்களைச் சந்திக்கவும் வந்தார். அனைவரும் மலை அடிவாரத்துக்கே வந்து பரசுராமரை வரவேற்றார்கள். பரசுராமரின் ரதம் வெகு வேகமாகப் புழுதியைக் கிளப்பி விட்டுக் கொண்டு வந்ததைப் பார்த்தால் புயல் காற்று வீசுவதைப் போல் தோன்றியது. அப்படிப் புழுதி கிளம்பிய ரதத்தில் வேகமாக வந்த பரசுராமர் பார்க்கவும் மிகவும் பெரிய உடலுடன் ஆகிருதியாக இருந்தார். தன் இடையில் புலித்தோலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவர் வயதானவர் என்றாலும் அதனால் அவர் வலிமை குன்றிக் காணப்படவில்லை. இப்போதும் அவர் தசைகள் இறுகிக் கெட்டிப்பட்டுக் கல் போன்ற வஜ்ரதேகம் படைத்திருந்தார். அவருடைய பரந்த முகத்தில் காணப்பட்ட தாடி இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தலை மயிரும் உச்சந்தலையில் தூக்கி முடியப்பட்டிருந்தது. அதைப் பார்க்கையில் கயிலை மலையின் வெண்பனி படர்ந்த சிகரத்தைப் போல் காட்சி அளித்தது. அடர்ந்த புருவங்களுக்குக் கீழே தெரிந்த விசாலமான கண்கள் அவருக்கு நகைச்சுவையும் வரும் என்று காட்டியது. கண்கள் பளிச்சென்று ஒளி வீசிப் பிரகாசித்தன.

அவர் தன் வலக்கையில் ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்திருந்தார். இடக்கையில் அவருடைய ஆயுதமான கோடரி காட்சி அளித்தது. அவர் அங்கும் இங்கும் அசையும்போதெல்லாம் அந்தக் கோடரியின் மேல் சூரிய வெளிச்சம் பட்டு அதன் கூர்மையான கத்தி போன்ற வெட்டும்பாகம் தகதகவெனப் பிரகாசித்தது. ரதத்தை இழுத்துப் பிடித்து நிறுத்திய பரசுராமர் அதிலிருந்து வேகமாகக் கீழே குதித்தார். அப்போதும் அவர் தோள் மேல் கிடந்தது கோடரி. அனைவரும் அவர் கீழே இறங்குகையில் நமஸ்கரித்தனர். அதைப் பார்த்த பரசுராமர் தன் வலக்கையை உயர்த்தி அனைவரையும் தீர்க்காயுசுடன் இருக்குமாறு வாழ்த்தினார். பின்னர் மஹா அதர்வரை இறுகத் தழுவிக் கொண்டார். காங்கேயர் பரசுராமரை நமஸ்கரிக்கத் தன் மாணாக்கனைப் பார்த்துப் புன்சிரிப்புடன் அவர் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

பின்னர் பெரிய குரலில் சிரித்தவண்ணம், “வந்துவிட்டாயா? காங்கேயா? நிஜமாகவே வந்துவிட்டாயா?” என்ற வண்ணம் மீண்டும் பெருங்குரலில் சிரித்தார். “நாளைக் காலை அனுஷ்டானங்களை முடித்த பின்னர் என்னை வந்து சந்தித்துப் பேசு!” என்றும் கட்டளை பிறப்பித்தார். “தங்கள் உத்தரவுப்படியே ஆசாரியரே!” என்று தலை குனிந்து பணிவாகக் கூறினார் காங்கேயர். பின்னர் ஜாபாலியின் பக்கம் திரும்பினார் பரசுராமர். “ஜாபாலி ரிஷியே! உங்கள் மகள் காசி தேசத்து அரசகுமாரியுடனும் அவர்களைக் கவனித்துக் கொள்ளும் மந்திரியுடனும் விரைவில் வருகிறாள். இங்கிருந்து எவரையேனும் அனுப்பி வைத்து அவர்கள் வருவதைத் தெரிந்து கொண்டு வரும்போது வரவேற்று இங்கே அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள்!” என்றார்.

“ஆசாரியர் கட்டளைப்படியே!” என்று மஹா அதர்வர் தலை வணங்கினார். பின்னர் அவர்கள் மலை மேல் ஏறுவதற்கான பகுதியை வந்தடைந்தனர். அப்போது பரசுராமர் திரும்பினார். கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் இனி அவரவர் இடத்துக்குச் செல்லுங்கள். உங்களுக்கெனக் குறிப்பிட்டிருக்கும் வேலையைப் பாருங்கள். மஹா அதர்வர் என்னைக் கவனித்துக் கொள்வார்.” என்று கூறி அனைவரையும் விடைபெற்றுச் செல்லுமாறு கூறினார். ஓர் அடி எடுத்து வைத்தவர் ஏதோ நினைத்தவர் போல் திடீரெனத் திரும்பி, “காங்கேயா, உன் தாய், அது தான் சத்யவதி, அவளும் வந்திருக்கிறாளா?” என்று கேட்டார். “ஆம், ஆசாரியரே!” என்றார் காங்கேயர். “அப்படி எனில், அவளையும் உன்னுடன் அழைத்து வா, காங்கேயா!” என்றவர் ஜாபாலியின் பக்கம் திரும்பினார். “ஜாபாலி, உங்கள் மகள் மிகக் கெட்டிக்காரி, சாமர்த்திய சாலியும் கூட!” என்றார். பின்னர் அதை ரசித்துத் தனக்குள் சிரித்த வண்ணம், “அவளை மணந்தவன் யாரோ? அந்த பாக்கியசாலியான பாலமுனியைக் குறித்துக் கூட அதிகம் பேசுகின்றனரே! அப்படிப் பட்டவன் யார்?” என்று வினவினார்.

த்வைபாயனர் தன் கைகளைக் குவித்த வண்ணம்  முன்னே வந்தார். “ஆசாரியரே, நான் தான் அவன். இதோ இங்கே தான் இருக்கிறேன்.” என்று அறிமுகம் செய்து கொண்டார். “ஓ, பாலமுனி, நீ பராசரரின் புதல்வனா?” என்று வினவினார் பரசுராமர். “ஆம், குருவே!” என்றார் த்வைபாயனர். “ம்ம்ம்ம், உன் மனைவி மிகக் கெட்டிக்காரி! சாமர்த்தியசாலி!” என்றவர் மீண்டும் தன் கண்களில் கேலிச்சிரிப்புத் தெரிய, “ஷைகவத்யாவின் ஆசிரமத்தில் அவளைச் சந்தித்தேன். அவள் முழுக்க முழுக்க உன்னைக் குறித்துத் தான் பேசினாள். உன்னைப் பற்றி அவள் புகழ்ந்து பேசியதைக் கேட்டதில் இருந்து உன்னைச் சந்திக்க ஆவலாய் இருந்தேன்!”

“ஆம், ஆசாரியரே, மஹா அதர்வர் ஜாபாலி ரிஷியின் புதல்விக்கு இன்னமும் என்னுடைய குறைபாடுகள் எதுவும் தெரியவரவில்லை. ஆகவே புகழ்மாலை சூட்டி வருகிறாள்.” என்ற த்வைபாயனரின் கண்களிலும் பரசுராமருக்கு இணையான கேலிச்சிரிப்புக் காணப்பட்டது. அதைப் புரிந்து கொண்ட பரசுராமர், “ஜாக்கிரதையாக இரு பாலமுனி! ஜாக்கிரதை!” என்று தன் ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கும் பாவனையில் ஆட்டினார். “உன்னைத் தொழுது வழிபாடு செய்கிறேன் என்னும் சாக்கில் உன்னை இழுத்து விட்டு விடப் போகிறாள்!” என்ற வண்ணம் குறும்புடன் சிரித்தார். “ஆசாரியரே, கணவனை விமரிசிக்கும் மனைவி அந்த விமரிசனங்களால் அவனைத் திணற அடித்து மூழ்கடித்துவிடுவாள்!” என்றார் த்வைபாயனர். இந்த சாதுரியமான பதிலைக் கேட்ட பரசுராமரும், ஜாபாலியும் மனம் விட்டுச் சிரித்தனர். அவர்கள் இருவரின் சிரிப்பு மற்றவர்களையும் தொத்திக் கொண்டது. “நீ சரியாகச் சொல்கிறாய், இளைஞனே!” என்ற வண்ணம் பரசுராமர் ஜாபாலியின் தோள்களைப் பிடித்த வண்ணம் மஹா அதர்வரின் ஆசிரமத்துக்காக மலை ஏறினார்.


1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.